பெரம்பலூர்: எறையூர் சிப்காட்டில் ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள கிராக்ஸ் காலணி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று (நவ.28) திறந்துவைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி 243.49 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா (SIPCOT industrial park in Perambalur) அமைப்பதற்கான அடிக்கல் நாட்டியிருந்தார். அப்போது குறுகிய காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிற்வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில், எறையூர் சிப்காட் தொழில்பூங்காவில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கும் (Phoenix kothari JR one footwear) முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார்.
இந்நிலையில், தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று அனைத்தும் நிறைவடைந்து கிராக்ஸ் காலணி உற்பத்தியை தொடங்க உள்ளன. இந்த நிலையில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி தொழிற்சாலையை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். எறையூர் சிப்காட்டில் இதற்கான விழாவில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, எஸ்.எஸ்.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பெரம்பலூரில் ரூ.400 கோடி முதலீட்டில் அமையும் இந்த தொழிற்சாலையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, 'காலணி தொழிற்சாலை வந்த பிறகு தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது என்றும் தென்மாவட்டங்களுக்கும் டெல்டா மாவட்டங்களுக்கும் முதலீடுகள் வரவுள்ளது என்றும் கூறினார்.
ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது என்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி பரவலாக்கப்பட்டு வரும் நிலையில், தஞ்சாவூர் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். எனவே, டெல்டா பகுதியில் ஒட்டுமொத்த வளர்ச்சி இருக்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கு வெகு தொலைவில் இல்லை” - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!