விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச் சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 60,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட, மக்காச்சோள பயிர்களில் கடுமையான படைப்புழு தாக்குதலால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஆரம்ப நிலையிலேயே படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். அதன்பின், வேளாண்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மக்காச்சோள பயிர்களில் மருந்து தெளிக்க 18 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சி கிராமத்தில் மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியைத் தொடங்கிவைத்து, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலைச் சமாளிக்க 264 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச் சோளத்திற்கும் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதற்காக ரூ. 11.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதன் முதல்கட்டமாக வேளாண்மை துறை சார்பில் பூச்சி கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணி நேற்று நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஆரியூரில் தொடங்கியது. இதனை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சேகர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், வேளாண் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படைப்புழுத் தாக்குதலால் மக்காச்சோள விவசாயிகள் வேதனை - நடவடிக்கை எடுக்குமா அரசு?