பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 10 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு பாசன குளங்கள், குட்டைகள் ஆகியவை குடிமராமத்துப் பணிகளின் கீழ் தூர்வாரப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.
தூர்வாரப்பட்டு வரும் குளங்களை மேற்பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சாந்தா, “பெரம்பலூர் மாவட்டத்தில் 2019 - 2020ஆம் நிதியாண்டில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் மொத்தம் 120 சிறு பாசன குளங்களில், ஐந்து கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவற்றில் 35 சிறு பாசன குளங்களின் பணிகள் முடிவு பெற்றுள்ளன. எஞ்சிய 85 சிறு பாசன குளங்களில் 90 விழுக்காடு நிறைவுபெற்றுள்ளன” எனத் தெரிவித்தார்.
அதேபோல் கிராம ஊராட்சிகளில் மொத்தம் 507 குடிமராமத்துப் பணிகள், ஐந்து கோடியே ஒரு லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவருகின்றன என்று கூறிய அவர், 507 பணிகளில் 214 பணிகள் முடிவுற்றுள்ளதாகவும், எஞ்சிய 293 பணிகள் விரைவில் நிறைவுபெறும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
போட்டிப்போட்டுச் சென்ற தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் மாணவர்கள் படுகாயம்!