கடந்தவாரம் பெரம்பலூர் மாவட்ட துறைமங்கலம் கேகே நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கபிலன் என்பவர் ஒருதலை காதல் விவகாரத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக பெரம்பலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையிலான காவல் துறையினர் கோனேரி பாளையத்தில் உள்ள புறவழிச்சாலையில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செஞ்சேரி கிராமம் அருகே கூடியிருந்த பத்து இளைஞர்கள் காவல் துறையினரை பார்த்து தப்பி ஓட முயன்றனர்.
தப்பி ஓட முயன்றவர்களில் 4 பேரை பிடித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையை சேர்ந்த முகம்மது ஹாலித், முகம்மது உமர், அஹமத் மற்றும் இதயத்துல்லா என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரித்ததில், கடந்த வாரம் தங்களது குழுவிலுள்ள ரவுடி கபிலனை வெட்டி கொலை செய்த நபர்களை கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
அதுமட்டுமின்றி தப்பியோடிய துறைமங்கலம் கேகே நகரைச் சேர்ந்த வினோத், சமத்துவபுரத்தை சேர்ந்த வினோத், பெரியார் நகரைச் சேர்ந்த சரவணன், நீலகண்டன் மற்றும் வடக்கு மாதவி சாலையைச் சேர்ந்த சபிக் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.