ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிடக்கோரி அகில இந்திய மக்கள் சேவை இயக்க பிரிவுத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் பெரம்பலூரில் செயல்பட்டுவரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலூனில் காற்றை நிரப்பி நூதன போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தை அமல்படுத்தினால் சுவாசிக்கும் காற்றுக்கு ஆபத்து வந்துவிடும். மேலும் பல உயிரினங்களுக்கும் மழை நீர் ஆதாரத்திற்கு பேராபத்து விளைவிக்கும் இந்த திட்டத்தை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்தனர்.