தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவபதியை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
"மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்கான தேர்தல்தான் இந்த நாடாளுமன்றத்தேர்தல். திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு பொய்யான தேர்தல் அறிக்கை. பொய்யைச் சொல்லி வாக்குகளை பெறுவதற்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை. கடந்த தேர்தல் அறிக்கையில் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறியது என்ன ஆயிற்று. அதிமுக தேர்தல் அறிக்கை உண்மையானது. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மாணவர்களுக்கு மடிகணினி, திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கொள்கை இல்லாத கூட்டணி எப்படி ஒரு நிலையான ஆட்சியை தர முடியும். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தது திராவிட முன்னேற்ற கழகம். பாலியல் குற்றச்சாட்டுக்கு மூல காரணமே திமுகதான். பாலியல் குற்றச்சாட்டில் பத்தாண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் பெரம்பலூர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர். ஒரு ஆண்மகனாக ஸ்டாலின் இதற்கு பதில் கூற வேண்டும். அதிமுக அரசில் பெரம்பலூரில் புதிய மருத்துவமனை கட்டடம், சின்ன மொட்டுலு அணை, கல்லூரி சாலைகள், ஏரி, குளம் உள்ளிட்டவைகள் தூர்வாரப்பட்டு உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அதிமுக அரசு சார்பில் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.