இன்று (அக்டோபர் 11 ) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தியும், விழிப்புணர்வு செய்தியையும் - காட்சிப் பதிவுகள் மூலம் வெளியிட்டுள்ளார்.
அதில் பெண் குழந்தைகள் நன்றாக உணவு உண்டு, நன்றாக படித்து, நல்ல சமுதாயத்தை படைக்க சர்வதேச குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், "பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும், சமமான உரிமைகளை பெறுவதற்கும், அவர்களது குரல் தனித்துவமாக ஒலிக்கவும், அவர்களது உரிமை பாதுகாக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர்கள் தங்களது கடமையை முடிக்க வேண்டும் என்பதற்காக இளவயதில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனைத்தொடர்ந்து குழந்தை பிறப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளால் அவர்களுடைய உழைக்கும் திறன் பாதிக்கப்படுவதோடு தந்தை, கணவர், சகோதர் உள்ளிட்டவர்களை சார்ந்து வாழ வேண்டிய சூழல் உருவாகிறது.
இதனால் அவர்களுடைய சிந்தனை திறன் பாதிக்கப்படுகிறது. எனவே நல்ல சமுதாயத்தை படைக்க பெண் குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம்" என்று அவர் வெளியிட்டுள்ள காட்சி பதிவில் தெரிவித்துள்ளார்.