பெரம்பலூர் மாவட்டம் செல்லியம்பாளையம் கிராமத்தில் கடந்த 12ஆம் தேதி வெடிவைத்து தோண்டப்பட்ட கிணற்றில் இருவர் சிக்கியுள்ளனர். இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரம்பலூர் தீயணைப்பு மீட்புப் பணி குழுவிற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வீரரான ராஜ்குமார் (36) என்பவர் கயிறு மூலம் கிணற்றில் இறங்கி இளைஞர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி அவர் மயக்கமடைந்தார்.
பின்னர் உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
மீட்பு பணியின்போது வீர மரணமடைந்த ராஜ்குமாரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (ஜூலை 13) தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.