பெரம்பலூர் மாவட்டம் சித்தளி, வெண்பாவூர், வடகரை, முருக்கன்குடி, சின்னாறு, பாடாலூர், கீழக் கணவாய், அன்ன மங்கலம் உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக உள்ளன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
தற்போது கோடைக்காலம் என்பதால் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் மான்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் நிகழ்வுகள் நிகழ்கின்றன. அவ்வாறு அவை வரும்போது வாகனம் மோதியும், நாய்கள் கடித்தும் மான்கள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வனத்திலிருந்து ஆயுதப்படை வளாகம் அருகே வந்தது. அப்போது அங்கிருந்த நாய்கள், அந்த மானைக் கடிக்க துரத்தின. அப்போது தப்பிக்க முயன்ற மான் எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் புள்ளி மான் உடலை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு காட்டுப் பகுதியில்,புள்ளிமானின் சடலம் எரியூட்டப்பட்டது.
இதையும் படிங்க: கிளியைக் கொண்டு டிக்டாக்! - அபராதம் விதித்த வனத் துறை