தமிழ்நாடு அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஆவின் பால் ஒரு லிட்டர் 34 ரூபாயிலிருந்து 40ஆக விலை உயர்கிறது. அதேபோல், சமன்படுத்திய பால் (நீலம்) ஒரு லிட்டர் 37 ரூபாயிலிருந்து 43, நிலைப்படுத்திய பால் (பச்சை) ஒரு லிட்டர் 41 ரூபாயிலிருந்து 47, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) ஒரு லிட்டர் 45 ரூபாயிலிருந்து 51 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகமது செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலை உயர்வு அறிவித்திருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றமளிக்கறது. பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக பசும்பாலுக்கு ரூ.40 எனவும், எருமை பாலுக்கு ரூ.50 எனவும் கொள்முதல் விலையை அறிவிக்கக் கோரியும் கடந்த நான்கு வருடங்களாக போராடி வருகிறோம். இந்நிலையில், வருகிற 27-08-19 அன்று அனைத்து மாவட்டங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் மறியல் பேராட்டம் நடத்த உள்ளோம். மேலும் 3ஆம் தேதி நடக்கும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் இந்த ஏமாற்று வேலை குறித்தும், போராட்டம் நடத்துவது குறித்தும் முடிவெடுக்க உள்ளோம்' என்றார்.