கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பலர் அண்மையில் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இவ்வாறு சொந்த ஊருக்கு திரும்பிய 33 நபர்களை அவரவர் இல்லங்களில் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்குதல் யாருக்கும் இல்லை. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், வெண்டிலேட்டர் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் வசதியுடன் 3 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டும், தனி மருத்துவக் குழுவினரும் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் காய்ச்சல் ,சளி ,இருமல் ,மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:கோவிட்-19 தொற்று : அனைவரும் முகக் கவசம் அணியத் தேவையில்லை -அமைச்சர்கள்