தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று (ஜூலை 31) ஒரே நாளில் 5 ஆயிரத்து 881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 55 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 477ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 257 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பெரம்பலூர் நகர்ப்புற பகுதியான மின் நகரில் வசித்து வருபவர், மனோகரன். இவர் ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனிடையே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோகரன், இன்று மீண்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.