பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கரை ஆதரித்து கடந்த மார்ச் 26ஆம் தேதி திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா குன்னம் பேருந்து நிலைய பகுதிகளில் வாக்கு சேகரித்து வந்தார்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி குன்னம் கிராம நிர்வாக அலுவலர் குன்னம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், கலகம் செய்யத் தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆயிரம் விளக்கு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட ஆ. ராசா முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி அவருக்கு எதிராக கண்டன ஆர்பாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மேலும் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அது தொடர்பாக ஆ.ராசா மன்னிப்பு கோரியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.