பெரம்பலூர் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 1912ஆம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோயில் திருவிழாக்களில் இந்து மற்றும் இஸ்லாமிய தரப்பு மக்களிடையே தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் 110 ஆண்டுகள் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா முயற்சியின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, வருவாய் கோட்டாட்சியர், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் முன்பாக இரு தரப்பு மக்களையும் அழைத்து அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, வி.களத்தூர் கிராமத்தில் எவ்விதப்பிரச்னையும் இன்றி அமைதியான முறையில் திருவிழா நடத்திட இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
தொடர்ந்து கோயில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதில் வி.களத்தூர் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா கடந்த மே 16ஆம் தேதி நடந்தது. அவ்விழாவில் அழைப்பிதழை இஸ்லாமிய ஜமாத்தார்கள் இந்து சமயப்பிரமுகர்களிடம் வழங்கி, அவர்களை திருவிழாவில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். அதில் இந்துமக்கள் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து போன்று வி.களத்தூர் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் வகையறா ஆலயங்களில் ஊரணி பொங்கல், மாவிளக்கு, சுவாமி திருவீதி உலா ஜூலை 30ஆம் தேதி (நேற்று) முதல் ஆக.01 ஆம் தேதி வரை 3 தினங்களுக்கு நடைபெறதிட்டமிடப்பட்டு, விழா நேற்று தொடங்கியது.
அதன்படி மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் நிலைநிறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி மற்றும் ஆகியோர் முன்னிலையில் இரு சமுதாய முக்கியப்பிரமுகர்கள் இணைந்து எவ்வித அசம்பாவிதமும் இன்றி சுவாமி திருவீதி உலா விழாவை நடத்தினர்.
இந்நிகழ்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், போலீசார், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் திருவிழாவாக இத்திருவிழா அமைந்தது.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 110 ஆண்டுகளுக்குப்பின் இந்து - இஸ்லாமியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி நடைபெற்ற ஊரணித் திருவிழா, அனைவரிடமும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத மோதல் குறித்து அச்சமின்றி பேசிய சாய் பல்லவி... சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய விவாதம்