பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிமுக பிரமுகர் மீது, நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான அருள் புகார் ஒன்றை தெரிவித்தார். மேலும், அவர் பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பேசிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பையும் உண்டாக்கினார். இதனிடையே தீண்டாமை வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அருளை கைது செய்தனர். மேலும் கடந்த வாரம் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வழக்கறிஞர்கள் மீது போலியாக புனையப்பட்டு குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகக் கூறி பெரம்பலூர் வழக்கறிஞர் சங்கம், பார் சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் நேற்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் காவல்துறையை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அருள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தைத் திரும்பபெற வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் போன்ற கண்டன கோஷங்களை எழுப்பினர்.