பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. ஐஸ் வியாபாரம் செய்துவருகிறார். இவரது வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய பிரபு, புதையலை எடுப்பதற்காக பரமத்திவேலூரைச் சேர்ந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்புகொண்டுள்ளார். அதன் பின்பு ஐஸ் வியாபாரி பிரபு, பூசாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்கள் 7 பேர் என புதையலை எடுக்க மாந்திரீக பூஜை செய்துள்ளனர்.
புதையலுக்காக இரவு, பகலாக குழி தோண்டல்
பின்னர் வீட்டிற்குள்ளேயே மூன்று நாட்களாக இரவு, பகலாக 20 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர், புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குழிதோண்டி கொண்டிருந்த 7 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் புதையலுக்காக நரபலி போன்ற விபரீத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
புதையல் ஆசையில் வீட்டிற்குள் குழி தோண்டிய சம்பவம், பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தென்காசியில் இளம்பெண் வெட்டிக்கொலை- பரபரப்பு தகவல்கள்!