தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 40 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தநிலையில், நேற்று ஒரு நாளில் 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்றரை வயது குழந்தை, 5 வயது குழந்தை என இரண்டு குழந்தைகள், ஆறு பெண்கள் உட்பட 36 பேர் திருச்சி, திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 33 பேரும் கோயம்பேடு காய்கறிச் சந்தையிலிருந்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களின் பகுதிகளை சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் தடுப்புவேலிகளை அமைத்துள்ளனர். மேலும், அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தீவிர காண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். நேற்று 33 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சாத்தூரில் 13 வயது சிறுவனுக்கு கரோனா தொற்று உறுதி!