நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வாழவந்தி கோம்பை பஞ்சாயத்துக்குட்பட்ட மேட்டூர் ஆச்சாவடி பகுதியில் நாச்சியம்மன் கோயில் மற்றும் நாச்சியம்மன் தடுப்பணைக்குட்டை அமைந்துள்ளது.
இங்குச் சுற்றுலாப் பயணிகள் விடுமுறை தினங்களில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் குளிப்பதற்கு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று(செப்.20) நாச்சியம்மன் தடுப்பணைக் குட்டையில் குளிப்பதற்காக சேந்தமங்கலம் காந்திபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வேங்கையன் மகன் மௌலிஸ் சென்றார். அப்போது நண்பர்களுடன் நாச்சியம்மன் தடுப்பணையின் மேலே இருந்து தண்ணீரில் குதித்துள்ளார்.
வெகுநேரமாக மௌலிஸ் தண்ணீரிலிருந்து வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அருகில் குளித்தவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் நீருக்குள் மூழ்கி இருந்த மௌலிஸை சடலமாக மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேந்தமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மௌலிஸ் உடலை கைபற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது போன்ற சம்பங்கள் இப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதால் நாச்சியம்மன் தடுப்பணைக் குட்டையில் குளிப்பதற்குத் தடை விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.