நாமக்கல்: ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையில், சாக்கடை கால்வாய் மேல்ப்பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்திரா காலனி பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும்போது, சாலையில் இருந்த அடி குழாயினை அகற்றாமல், ஒப்பந்ததாரர் மிகவும் அலட்சியமாக அடி குழாயினை, அப்படியே விட்டு சாலை போட்டுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகநாதன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்தை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு கான்கிரீட்டில் போடப்பட்ட அடி குழாயினை உடனடியாக அகற்றினர்.
மேலும், இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஜெகநாதன் கூறுகையில், “கான்கிரீட்டில் இருந்த அடிபம்பு உடனடியாக அகற்றப்பட்டது. மேலும் இந்தப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வரும் காலங்களில் எந்த ஒப்பந்தமும் தரக்கூடாது என அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே வேலூரில் சாலையில் இருந்த அடி குழாய், பைக், கார் உள்ளிட்டவற்றை அகற்றாமல் அப்படியே சாலை போடப்பட்ட நிலையில், ராசிபுரத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.