கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் வருகின்ற மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை செய்து வரும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் - நாமக்கல் மாவட்ட எல்லையான காவிரி பாலத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடி வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அவர்களைத் தடுத்து நிறுத்திய பரமத்திவேலூர் உதவி ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான குழுவினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆறு பேரையும் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து உணவு உள்ளிட்டவை கிடைக்க வழிவகை செய்தனர்.
இதேபோல் கடந்த 21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திற்கு கண்டெய்னர் லாரியில் பதுங்கி சென்ற 24 பேரை மீட்ட உதவி காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான குழுவினர், அவர்களையும் காப்பகத்தில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென்காசியில் நாளை முழு ஊரடங்கு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு