நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முனியப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர், பணி ஆள்களை கொண்டு வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். வீட்டின் அஷ்திவாரம் எழுப்பிய நிலையில் கழிவு நீர், குடிநீருக்கான தொட்டிகளின் பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் முடிவடைந்தது. தொடர்ந்து, தொட்டிகளின் முட்டுக்களை அகற்றுவதற்காக ஐந்து பேர் கொண்ட பணி ஆள்களில் மூவர் மட்டும் 10 அடி ஆழத்தில் இறங்கியதாக தெரிகிறது.
பின்னர், அவர்களிடம் இருந்து எந்த சத்தமும் தென்படாததால் மேலே இருந்த இருவர் தொட்டிக்குள் எட்டி பார்த்தனர். அப்போது மூவரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவர்களை மீட்பதற்காக தொட்டிக்குள் இறங்கிய இருவரும் மயங்கினர். இதையடுத்து, நாமகிரிப்பேட்டை காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல், தீயணைப்புத் துறையினர் மயக்க நிலையில் இருந்த ஐந்து பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சஞ்சய், முருகேசன் ஆகிய இருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் ஆறுமுகம், தவமுருகன், சிரஞ்சீவி உள்ளிட்ட மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த தொட்டி திறந்தவுடன் 10 அடி ஆழத்தில் இறங்கியதால் சுவாச கோளாறு காரணமாக இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.