சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் போரசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ள உத்தரவிடக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்தா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டக்கல்வித் துறை இயக்குனர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவை ஆய்வு செய்த நீதிபதி, அரசு சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. காலியாக உள்ள உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல், மாணவர்களுக்கு எப்படி முறையான சட்டக் கல்வி வழங்க முடியும் என எதிர்பார்க்க முடியும். இது சட்டம் படித்து வழக்கறிஞராக விரும்பும் எதிர்கால தலைமுறையை அழித்து விடும் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க : பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது!
முறையான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால், சட்டக் கல்லூரிகளை மூடி விடுவது நல்லது என கருத்து தெரிவித்த நீதிபதி, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பாடம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடும். அதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.
ஆகையால், அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புவதற்கான செயல் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், தமிழக அரசின் சட்டத்துறை செயலாளர் அக் 15ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்