சென்னை: முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இதில் 8.7 கிலோ தங்கம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏற்கெனவே அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருந்தார். 2018ஆம் ஆண்டு நான் இருக்கும் போதே புலன் விசாரணை நடத்தினேன். சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பதை முதலில் 2018ஆம் ஆண்டே நான் கண்டுபிடித்து செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தேன். இந்த சிலை பல்லவர் காலத்தில் செய்யப்பட்ட சிலை.
தமிழக கோவில் சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது குறித்து இதுவரை 45 வழக்குகள் பதியப்படாமல் இருக்கின்றன. ஏன் இதுவரை வழக்குப் பதியப்படவில்லை? நான் சமண கோவில் சிலை கடத்தல் தொடர்பாக போலீசிடம் தெரிவிக்கிறேன். ஆனால் வழக்குப் பதிய 60 நாட்களாகிறது.
வெளிநாட்டில் இருக்கும் தமிழக கோவில் சிலைகளை தமிழகத்திற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் முடியவில்லை. சிலை கடத்தல் வழக்குகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு!
சோமாஸ்கந்தர் சிலை 1991ஆம் ஆண்டில் இருந்தே திருட ஒரு கும்பல் திட்டம் தீட்டி வருகிறது. இந்து சமய அறநிலைத்துறை கேவலமான நிர்வாகத்தை நடத்தி வருகிறது. இந்தத் துறை வந்த பிறகு சுமார் 638 சிலைகள் திருடப்பட்டுள்ளன.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ராஜராஜசோழன் சிலை கோவிலுக்கு சொந்தமானது இல்லை என்று அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் அஃவிடவிட்டில் கையெழுத்து போடுகிறார். இது மிகவும் அதிர்ச்சியை அளிக்கும் ஒன்று. வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை மீண்டும் கொண்டு வரவிடாமல் கும்பல் தடுக்கிறது.
கடத்தப்பட்ட தமிழக கோவில் சிலைகளை வெளிநாட்டில் பதுக்கி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரின் சகோதரி சுஷ்மா செரீன். இவரது மகள் மம்தா கபூர்.இவர்கள் வெளிநாட்டில் ரூ. 250 கோடி மதிப்பிலான சாமி சிலைகளை வைத்துள்ளார்கள்.
ஆனால் இவர்களை கைது செய்து தமிழகம் கொண்டு வர சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எதுவும் செய்யவில்லை. சிங்கப்பூரில் வசிக்கும் பரமேஸ்வரி பொன்னுசாமியும் சிலை கடத்தல் வழக்கில் தொடர்பு உள்ளது. அவரையும் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்