நாமக்கல்: ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே உள்ள ஒரு தனியார் தீம் பார்க்கில், கடந்த 11ஆம் தேதி சேலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதன் அடிப்படையில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், நேற்று (மே 25) சம்பந்தப்பட்ட தனியார் தீம் பார்க்கிற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் எந்தெந்த பகுதிகளுக்குச் சென்றார், எவ்வளவு நேரம் தண்ணீரில் விளையாடினார் என்பது குறித்து தீம் பார்க் நிர்வாகத்தினர் மற்றும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் நிவாரணமாக வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், “சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையிலேயே உள்ளது.
சிறுமியின் கன்னித்திரை சேதமடையவில்லை என காவல் துறையினரின் அறிக்கையில் உள்ளது. இதற்கான ஆதாரம் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருக்கிறது. முன்பு நான் கூறிய கருத்தை சில ஊடகங்கள், ஆளுநரின் கருத்துக்கு மாற்றுக் கருத்து என அதை பரப்பி விட்டனர்.
குழந்தைத் திருமணம் நடைபெற்றதாக சிறுமி மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வற்புறுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் தடுப்பு தொடர்பு விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மேலும், சிறுவன் உயிரிழந்த தீம் பார்க்கில் பராமரிப்பு இன்றி சில பகுதிகள் உள்ளது. அதனை 7 நாட்களுக்குள் பராமரிப்பு செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
முன்னதாக, நேற்றைய முன்தினம் (மே 24) கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், “குழந்தை திருமணம் நடைபெறவில்லை.
தங்களை கட்டாயப்படுத்தி குழந்தைத் திருமணம் நடந்ததாக சொல்லச் சொன்னார்கள் என பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூறி உள்ளனர். இந்த சம்பவத்தில் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், குழந்தைகளின் பிறப்புறுப்புகளைத் தொட்டு விசாரணை நடத்தப்பட்டது உண்மை.
இந்த விவகாரம் குழந்தை சம்பந்தப்பட்டது என்பதால், அனைத்தும் ரகசியமாக விசாரிக்கப்பட்டது” என தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சிதம்பரத்தில் உள்ள தீட்சிதர்களின் குடும்பத்தினர் குழந்தைத் திருமணம் செய்ததாகக் கூறி, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவ்வாறு செய்தது தவறு எனவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிதம்பரம் குழந்தைகளிடம் இருவிரல் சோதனை நடக்கவில்லை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்