நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலி அமுதா அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கடந்த பல ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆறு பெண்கள் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 29ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 5 குழுக்கள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி காவல் துறையினர் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் கைதான கொல்லிமலை அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி ஆகிய இரண்டு பேருக்கு அளித்த இரண்டு நாட்கள் காவலும், இடைத்தரகர்கள் ஹசீனா (எ) நிஷா, பர்வீன் ஆகிய இருவருக்கு அளித்த ஒரு நாள் காவலும் நேற்றுடன் முடிவடைந்ததால், அவர்கள் நான்கு பேரையும் சிபிசிஐடி காவல் துறையினர் நாமக்கல் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.
மேலும் எஸ்.கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த செவிலி உதவியாளர் சாந்தி என்பவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி கருணாநிதி மே 24ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொல்லிமலை, ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் புதிதாக பிறந்த குழந்தைகள் குறித்து கடந்த வாரம் முதல் மேற்கொண்ட கள ஆய்வு அறிக்கையை, மாவட்ட சுகாதாரத் துறை பணியாளர்கள், நேற்று சென்னை சுகாதாரத் துறை இயக்குநர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடி காவல் துறையினர் ஆகியோருக்கு தாக்கல் செய்துள்ளனர்.