நாமக்கல், பூங்கா சாலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வேளாண் சட்டங்கள், 2020 மின் மசோதா திருத்தச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறக்கோரியும், டெல்லியில் 10ஆவது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரைக் கண்டித்தும் பிரதமர் மோடியின் உருவ பொம்மையைக் கையில் ஏந்தி போராட்டக் குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை போரட்டக்காரர்கள் எரிக்க முயன்ற நிலையில், காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கையில் இருந்த உருவபொம்மையைப் பறித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து குண்டுக்கட்டாகத் தூக்கி பேருந்தில் ஏற்றி, தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.
இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 30 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாய சங்கத்தினர் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் அம்பானி, அதானி ஆகியோரின் உருவப்படங்களை கிழித்தும், உருவபொம்மையை எரிக்கவும் முயற்சி செய்தனர். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் விவசாய சங்கத்தினரைக் கைது செய்தனர்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாசிலாமணி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 15 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன், தமிழரசன், ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தலைமை தொலைபேசி நிலையம் முன்பு வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் மணி தலைமையில், பிரதமர் மோடி மற்றும் அதானியின் உருவ பொம்மைகளை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கொட்டும் மழையில் மோடி உருவபொம்மையை எரித்து மறியல் போராட்டம்!