நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற அம்மன் குளம் உள்ளது. இக்குளம் பல ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளம் திருச்செங்கோடு நகர நிலத்தடி நீர் ஆதாரமாகப் பயன்பட்டுவருகிறது.
இந்நிலையில் அம்மன் குளத்தில் ஆகாயத் தாமரைகள் தேக்கமடைந்து, குளம் தூய்மையற்று கிடந்தது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரனிடம் தெரிவித்தனர். இதையடுத்து தன்னார்வலர்கள், சமூகத் தொண்டு நிறுவனங்கள், நகராட்சிப் பணியாளர்கள் உதவியுடன் அம்மன் குளம் தூர்வாரும் பணி நேற்று (ஜூன் 16) தொடங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார். இவை மாஸ் கிளீனிங் என்ற அடிப்படையில் நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தலைமையிலான சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் பேசியதாவது, “குளத்திற்குள் உள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தி மழைநீர் சேகரிக்கப்படும். கரைகளைப் பலப்படுத்தி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவடையும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விண்டோஸ் 10: நெருங்கும் முடிவு காலம் - புதிய பதிப்பை களமிறக்கும் முனைப்பில் மைக்ரோசாப்ட்!