நாமக்கல் மாவட்டம் குமாரபளையத்தில் நேற்று (பிப்.15) ஆதிதமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் அருந்ததியர் ஆதரவு மாநாடு நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது, "முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அருந்ததியர் சமுதாயத்தை அடையாளம் காட்டினார். அவர் வழியில் செயல்படும் இந்த அரசு அருந்ததியருக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 82 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கி பட்டியலின மக்கள் பல தொழில்கள் செய்து வாழ்க்கையில் ஏற்றம் பெற இந்த அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.
சொந்த வீடு இல்லாத 50 ஆயிரம் பட்டியிலின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். சுதந்திர பேராட்ட வரலாற்றில் கொங்கு மண்டலத்திற்கு தனி பெருமை உள்ளது. சுதந்திர பேராட்ட வீரர் தீரன் சின்னமலை படையின் தளபதியாக இருந்த அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த பொல்லனுக்கு தனி சிறப்பு உள்ளது.
சுதந்திர பேராட்ட வீரர் பொல்லானுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உருவ சிலை அமைத்து மணிமண்டபம் அமைக்கப்படும். அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்" இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: நாளை புதிய தொழிற் கொள்கையை வெளியிடும் முதலமைச்சர்!