கிருஷ்ணகிரியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றியவர் ராஜா. இவர் கடந்த 14ஆம் தேதி பணியில் இருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மதுபானம் வாங்குவது போல் நடித்து ராஜாவை கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் டாஸ்மாக் கடையில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், மதுபானங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இச்சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒரு மணி நேரம் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு பொரசபாளையத்தில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கவேண்டி, வேலை நேரத்தை பிற்பகல் 12 மணியிலிருந்து இரவு 8 மணியாக மாற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து அவர் கூறுகையில், டாஸ்மாக் விற்பனை பணத்தை டாஸ்மாக் நிர்வாகமே பெற்று செல்ல வேண்டும். அல்லது சென்னையில் உள்ளதுபோல் வங்கி பிரதிநிதிகளே நேரடையாக வந்து பெற்றுச் செல்ல வேண்டும்’ என கூறினார். மேலும், டாஸ்மாக் ஊழியர் ராஜா குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.