தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய மாநில அரசுகள் உலக அளவில் உள்ள பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து பல்வேறு கடன்கள், வரிச் சலுகைகள், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்றன. ஆனால் உள்ளூர் உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து தருவதில்லை. இதே நிலை நீடித்தால் வியாபாரிகள் வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் ஐ.பி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் வணிகத் துறையில் மத்திய, மாநில அரசுகள் எங்களின் கோரிக்கைகளை ஏற்று வியாபாரம் தொழிலை பாதுகாக்க வேண்டும். இனாம், இனாம் என அனைத்தையும் அரசு இலவசமாக கொடுத்து மக்களை டாஸ்மாக் கடைக்கு இழுத்து குடிகாரர்கள் ஆக்கி விட்டது. டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது பூட்டப்பட்டிருந்த வணிக நிறுவனங்களின் கடைகளை உடைத்து அதிலிருந்த பொருட்களை சூறையாடி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளித்து உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் தாக்கம்: பங்குச்சந்தை மீண்டும் சரிவு