நாமக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு தொடங்கிவைத்து விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
இதனையடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நாமக்கல் மாவட்ட காவல் துறையின் சார்பிலும், ஈஷா இயக்கம் சார்பிலும் மாவட்ட ஆயுதப்படை வளாக உள் மைதானத்தில் அரசு, வேம்பு உள்ளிட்ட நிழல் தரும் மரக்கன்றுகளையும், கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழவகை மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு பேசும்போது, ’சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் மரக்கன்றுகள் நட வேண்டும். அவற்றை அன்றாடம் பேணிக் காக்க வேண்டும். மரங்கள் நமது அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான வாழ்வு அமைய வித்திடும்’ எனக் கூறினார்.