நாமக்கல்லில் மூன்று தினங்களுக்கு முன்பு சட்டக்கல்லூரி திறப்பு விழா மேடையில் பேசிய நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நாமக்கல்லில் தொடர் மணல் கொள்ளை நடப்பதாக அமைச்சர் தங்கமணியிடம் புகார் தெரிவித்திருந்தார். அதன்பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் மணல் கொள்ளை என்பதே இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர் மணல் கொள்ளை குறித்து நிரூபிக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், நேற்று முன்தினம் பரமத்தி வேலூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட நான்கு லாரிகளை பறிமுதல் செய்தார். அதேபோன்று இன்று மோகனூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக தகவலறிந்த சின்ராஜ், சம்பவ இடத்திற்கு சென்று மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்தார். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் அள்ளியதாக லாரி ஓட்டுநர் தெரிவித்தார்.
இதுகுறித்து மோகனூர் காவல் ஆய்வாளர் சுகுமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அந்த புகாரை ஏற்க மறுத்து, மணல் ஏற்றி வந்த லாரி உரிய உரிமம் பெற்று வந்ததாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜூக்கும் மோகனூர் காவல் ஆய்வாளர் சுகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்ராஜ் 'நாமக்கல்லில் மணல் கொள்ளை சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதுதொடர்பாக அமைச்சரிடம் தெரிவித்தால் மணல் கொள்ளை நடந்ததாக நிரூபிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் பரமத்தி வேலூரிலும் தற்போது மோகனூரிலும் நான் மணல் லாரிகளை பறிமுதல் செய்துள்ளேன்’ என்றார்.