நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள முள்ளுகுறிச்சி, கப்பலூத்து, சிங்கிலியன்கோம்பை உரம்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சந்தனமரம் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனுமதியுடன் சுமார் 100க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வாங்கி வளர்த்துவந்தார்.
நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் மரங்களை வெட்டி கடத்த முயன்றுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு வந்த விவசாயி முத்துசாமி தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர்கள் கையிலிருந்த ஆயுதங்களால் முத்துசாமியை வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஆபத்தான நிலையிலிருந்த முத்துசாமியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து ஆயில்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உரம்பு, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி பகுதிகளில் அடிக்கடி இதேபோல் சந்தன மரங்களைக் கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால் காவல் துறையினர் இதுவரை யாரையும் கைதுசெய்யவில்லை என்பது மக்களின் புலம்பலாக உள்ளது.