நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆடியோ ஒன்று ஏப்ரல் 25ஆம் தேதி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலி அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி, சாந்தி, ரேகா, அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் உள்ளிட்ட 11 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து சிறையிலிருந்த அவர்கள் பலமுறை பிணை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி கருணாநிதி கைதானவர்களின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இடைத்தரகர்கள் செல்வி, லீலா, சாந்தி ஆகியோர் பிணை கேட்டு நாமக்கல் முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது முதன்மைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி விடுப்பில் இருந்த காரணத்தினால், இந்த வழக்கு நாமக்கல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அப்போது, இவ்வழக்கின் மீதான விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது இடைத்தரகர்கள் செல்வி, லீலா ஆகியோரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, சாந்தியின் பிணை மனு மீதான விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.