நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மின்னக்கல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகிறார்கள். இதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தின் வடுகம், புதுப்பட்டி, குட்டகரை, பட்டணம் ஆகிய பகுதிகளிலும் சில நாளாக 200-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கை கால் வீக்கம், மயக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டுவருகிறார்கள். மருத்துவரிடம் காண்பித்தும் மர்ம காய்ச்சல் குணமாகவில்லை என்று கிராம மக்கள் கூறிவருகின்றனர். எனவே இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பீதியடைந்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டுவரும் இந்தப் பகுதி மக்கள் அருகேயுள்ள வெண்ணந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் அங்கு போதுமான மருத்துவர்கள் செவிலியரும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி மருத்துவமனையே சுகாதாரமின்றி காணப்படுகிறது. மேலும், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளதால், சுகாதாரத் துறை சார்பில் மருத்துவக் குழுவை உடனடியாக அனுப்பி முறையான சிகிச்சை தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.