ஆடி அமாவாசை தினமான இன்று (ஜூலை20) காவேரி கரையோரம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதில் அதிகளவில் பொதுமக்கள் கூடும்போது கரோனா தொற்று நோய் பரவ வாய்ப்பிருப்பதால் காவேரிக்கரையோர பகுதியான பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடி அமாவாசையான இன்று திதி, தர்ப்பணம், பிறசடங்கு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 144 தடை உத்தரவை மீறி தர்ப்பணம் கொடுக்கச் சென்றால் அவர்கள் மீதும், அவர்கள் சென்ற வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் காவேரி கரையோர பகுதியில் பொதுமக்கள் காவேரி கரையோரத்திற்கு செல்வதை தடுப்பதற்கு அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் குளிக்கச் செல்வதாக கூறி தர்ப்பணம், திதி கொடுத்து விட்டுச் சென்றனர்.
மேலும் ஆடி அமாவாசை என்பதால் பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு தீர்த்தம், பால் குடம் எடுத்து வந்தனர். அவர்களையும் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.