நாமக்கல்: ராசிபுரம் அடுத்த செம்மண் காடு பகுதியைச்சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பிரபாகரன் (10). கார்கூடல்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன், நேற்று (ஆக. 16) வழக்கம்போல் பள்ளி செல்வதற்காக செம்மண்காடு பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தான்.
அப்போது, தனியார் கல்லூரி பேருந்து ஒன்று நாரைகிணறு பகுதியில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே லாரி வந்தது. லாரியின் மீது மோதாமல் இருக்க கல்லூரி பேருந்து ஓட்டுநர் அன்பழகன் பேருந்தினை இடதுபுறமாக திருப்பியுள்ளார்.
இதனால், நிழல் கூடத்தில் நின்றுகொண்டிருந்த மாணவன் பிரபாகரன் மீது கல்லூரி பேருந்து மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கல்லூரிப்பேருந்தில் பயணம் செய்த 2 மாணவிகள் படுகாயமடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளாகி பேருந்தில் இருந்த மாணவிகள் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: சிலை வாங்குவது போல் நடித்து சிலை திருடர்களை பிடித்த காவல்துறையினர்