தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கையில் பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறு, குறு, நிதி நிறுவனங்கள் பொதுமக்களை மிரட்டி தவணைத் தொகை வசூலித்து வருவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்து வந்தன.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் செல்வம் தலைமையில் இன்று (ஜூன்.13) நிதி நிறுவனங்களின் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 14 நிதி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் காவல் துறையினர் பேசுகையில், “நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் தவணை தொகையை கறாராக வசூலிக்க வேண்டாம், ’வட்டிக்கு வட்டி’ என கூடுதல் வட்டி கேட்க வேண்டாம். ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் நிதி நிலைமையை அறிந்து, மென்மையான போக்கைக் கடைபிடித்து கடன் தொகையை வசூலிக்க வேண்டும்.
தவணைத் தொகை கொடுக்க முடியாத நபர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்வது குறித்து புகார் வந்தால், வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : சாலை பாதுகாப்புப் பணியில் பெண் காவலருக்கு விலக்கு - டிஜிபி திரிபாதி