நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (43). எலக்ட்ரிக் கடை வைத்திருக்கும் குமாருக்கும், சாரதி என்பவருக்கும் கடந்த 14ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் அதன்பிறகு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சாரதி ஏழு வருடங்களுக்கு முன்பு குழந்தையுடன் கணவர் குமாரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். உறவினர்களை வைத்து பேசியும் இந்த பிரச்னையில் எவ்வித முடிவும் ஏற்படாததால், தனியாக வசித்து வந்த குமார் அதேபகுதியைச் சேர்ந்த லதா என்பவரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தற்போது ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இதனை அறிந்த சாரதி, ஆண் குழந்தை பெறாமல், பெண் குழந்தை பெற்றதாக கூறியும், திருமணத்தின் போது கூறிய 30 சவரன் நகையில் ஐந்து பவுன் குறைவாக அளித்ததாக கூறி தன்னை திட்டமிட்டு வன்கொடுமை செய்து வீட்டை விட்டு விரட்டினர். முதல் மனைவியான தானும் எங்கள் இருவருக்கும் பிறந்த 13வயதாகும் பெண் குழந்தையும் உயிரோடு இருக்கும் போது முறையாக விவாகரத்து பெறாமல் தனது கணவர் குமார் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
எனவே இரண்டாவது திருமணம் செய்த குமார், அவருக்கு உடந்தையாக இருந்து லதா, குமாரின் தாயார் சரஸ்வதி, தங்கை நிர்மலா, கணவரின் மைத்துனருமான பரமேஸ்வரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாரதி திருச்செங்கோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குமாருக்கு உடந்தையாக இருந்த லதா, சரஸ்வதி, நிர்மலா, பரமேஸ்வரன் உள்ளிட்டவர்களையும் தேடி வருகின்றனர்.