நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தனபால் (36). இவர் மீது 2018ஆம் ஆண்டு சூரியம்பாளையத்தைச் சேர்ந்த குப்பன் என்ற நிதி நிறுவன அதிபரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியான இவர், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். முன்னதாக திருச்செங்கோட்டில் பிரபல ரவுடி வளத்தி மோகன் கொலை வழக்கிலும் தனபால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தனபால் ஆனங்கூர் சாலையில் உள்ள பன்றி இறைச்சி கடைக்கு இரண்டு நபர்களுடன் வந்துள்ளார். இதையடுத்து, கடையின் பின் பகுதியில் உடன் வந்தவர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது திடீரென அலறல் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, கறிக்கடைககாரர் பாலன் சென்று பார்த்தபோது வெட்டுகாயங்களுடன் தனபால் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
அப்போது தனபாலுடன் வந்தவர்களும் தப்பிச் சென்றுவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த கறிக்கடைக்காரர் பாலனும் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின், தனபாலை கொலை செய்தது அவருடன் வந்தவர்களா? இல்லை வேறு யாரேனும் செய்தார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு: ஒருவர் உயிரிழப்பு