நாமக்கல்லில் காவல் துறையினர் சார்பில் புதிதாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கான காவல் துறையினருக்கு "capseye" ஆண்ட்ராய்டு செயலிகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, சேலம் சரக டிஐஜி செந்தில் குமார், நாமக்கல் மக்களவை உறுப்பினர் சின்ராஜ், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் சின்ராஜ், "நாமக்கல் தொகுதி மக்களின் முக்கிய பிரச்னையாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதனைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
அரசு அலுவலர்கள் உங்களை புறக்கணிக்கிறார்களா என எழுப்பிய கேள்விக்கு, "எம்பியாக வெற்றிபெற்ற பின்பு அரசு சொத்தாகவே ஆகிவிடுகிறேன். எனக்கு இனிமேல் கட்சி முத்திரைகள் இருக்க வாய்ப்பு இல்லை. நான் பொதுமக்களுக்காக மக்களவைத் தொகுதியில் பணியாற்றும் ஒரு மக்கள் பிரதிநிதியாக ஆகிவிடுகிறேன். எனக்கு கட்சி பாகுபாடுகள் தேவையற்றது. அனைத்து மக்களும் இணைந்து வெற்றிபெறச் செய்ததால் நான் அமைச்சர்களையோ அலுவலர்களையோ சந்திப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை" என சின்ராஜ் பதிலளித்தார்.
மேலும், மக்களவை உறுப்பினராக பதவி ஏற்பு நடைபெற்றவுடன் விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நாமக்கல் மக்களவைத் தொகுதி மக்களின் பிரச்னைகளை எடுத்துக் கூற உள்ளதாகவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.