நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்திலிருந்து ராமபுரம் செல்லும் சாலையில் ஈச்சிகாடு என்ற இடத்தில், பச்சிளங் குழந்தை ஒன்றின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் சத்தம் கேட்ட பொதுமக்களில் சிலர் அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து ஒரு சில மணி நேரமே ஆன பெண் பச்சிளங் குழந்தை வெயிலில் துடித்துக் கொண்டிருப்பதை கண்டனர்.
அந்த குழந்தையை சுற்றிலும் எறும்புகள் மொய்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையை வீசி சென்றது யார் என, எலச்சிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.