நாமக்கல்லை அடுத்துள்ள விட்டமநாயக்கன்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த ஐந்து கல் குவாரிகள், பாதுகாப்பு அறை, தலைக்கவசம் அணிதல் உள்ளிட்ட எவ்வித அரசின் விதிமுறைகளையும் பின்பற்றாமல் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இதனையடுத்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமார் தலைமையில் வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்கள் குவாரிகளில் ஆய்வு செய்தனர். இதில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டமநாயக்கன்பட்டியில் ஒரு குவாரி, கொண்டமநாயக்கன்பட்டியில் நான்கு கல் குவாரிகள் ஆகியவை எவ்வித அனுமதியின்றி செயல்பட்டது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கல் குவாரிகளுக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர். கடந்த மே மாதம் 27ஆம் தேதி கொண்டமநாயக்கன்பட்டியில் செயல்பட்டுவந்த கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரழந்த நிலையில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமார், நாமக்கல் வருவாய் கோட்டத்தில் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி கல்குவாரிகள் செயல்படுகிறதா என ஆய்வுசெய்து, விதிமுறைகளைப் பின்பற்றாத குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.