நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலி பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். எளையாம் பாளையம் குடித்தெருவில் வசித்து வரும் இவருக்கு கவிதா (23) என்ற மனைவியும் மூன்று வயதில் பெண் குழந்தையும் இருந்துள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துள்ள கவிதா, பெரியமணலியில் உள்ள தறிப்பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது அதே தறிப்பட்டறையில் வேலை செய்து வந்த பெரியமணலி கோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகத்தின் மகள் சங்கீதாவுடன் (20) பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் நட்பாக தொடங்கி படிப்படியாக இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்களாக மாறினர். இதையறிந்த இருவரது குடும்பத்தினரும் கவிதா, சங்கீதாவை கண்டித்தனர்.
இந்நிலையில் இன்று கவிதாவும், சங்கீதாவும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எலச்சிப்பாளையம் காவல்துறையினர் இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சங்கீதாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது வீட்டார் முடிவு செய்துள்ளனர் என்றும் வரும் 27ஆம் தேதி திருமணமும் நாளை நிச்சயதார்த்தமும் நடக்க இருந்த நிலையில் கவிதாவும், சங்கீதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... தடம் மாறும் மாணவர்கள்...! தன்பால் சேர்க்கை என்ற பெயரில் வழிப்பறி!