நாமக்கல்: திருச்செங்கோட்டில் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாத திருவிழாவில் தெப்ப தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் 1980களில் ஒருமுறை திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்திலும் நீர் வற்றியது.
திருச்செங்கோடு முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அந்த வருடம் மாரியம்மனுக்கு ஐப்பசி மாத திருவிழா நடத்தவில்லை. அடுத்து வரும் காலங்களில் தெப்ப தேர் உற்சவம் நடைபெறும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்த வருடங்களில் ஐப்பசி மாதம் கடும் வறட்சி ஏற்பட்டது.
இந்தாண்டு திருச்செங்கோடு பகுதி முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. தெப்பக்குளத்திலும் தண்ணீர் நிரம்பியது. அதனால் இந்தாண்டு தெப்ப தேர் உற்சவம் நடைபெறும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு தெப்ப தேர் உற்சவம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
அதன்படி நேற்று(நவ.11) திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் பகுதிகளில் இருந்து வந்த தெப்பத்தேர் கட்டுமான குழுவினர் தெப்ப தேரை வடிவமைத்து முன்னோட்டம் பார்த்தனர். அதனை தொடர்ந்து தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமடைந்தன. சுமார் 60 டின்களை கொண்டும் மரங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்ப தேரை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதன்பின் பெரிய தெப்பக்குளத்திற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்து மாரியம்மன் ஆகியோரின் உற்சவர்களை தெப்பத்தில் வைத்து பூஜைகள் செய்து தெப்பக்குளத்தில் பக்தி பரவசத்துடன் தேர் விடப்பட்டது.
42 ஆண்டுகள் பிறகு நடைபெறும் இந்த திருவிழாவை காண மக்கள் கொட்டும் மழையிலும் குடை பிடித்த வண்ணம் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: வெகு விமர்சையாக நடைபெற்ற ஏழூர் முத்தாலம்மன் சப்பரத் திருவிழா...!