பொள்ளாச்சியிலிருந்து மணல் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று (ஆக. 19) காலை ஜெயபால் என்ற ஓட்டுநர் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வழியாக கடலூர் சென்று கொண்டிருந்தார். அப்போது, மெட்டாலா அருகே லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது லாரியை பின்தொடர்ந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் செந்தில், காவலர் தர்மராஜன் ஆகியோர் லாரியை வழிமறித்து நிறுத்த முற்பட்டனர். இருப்பினும் லாரி ஓட்டுநர் ஜெயபால் லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
பின்பு தொடர்ந்து வந்து லாரியை நிறுத்திய காவலர்கள் லாரி ஓட்டுநரை திட்டியது மட்டுமில்லாமல் இரு காவலர்களுக்கும் 300 ரூபாய் தர வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓட்டுநர் ஜெயபால் ரூ.50க்கு மேல் தர முடியாது எனவும் கூறியதையடுத்து சிறப்பு காவல் ஆய்வாளர் செந்தில், காவலர் தர்மராஜன் ஆகியோர் 100 ரூபாய் தர கோரி ஓட்டுநரை வற்புறுத்தியுள்ளனர்.
இதனை லாரியிலிருந்து செல்போனில் வீடியோ எடுத்த லாரி உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார் இந்த காட்சிகள் வைரலாக பரவியது.
இதனையடுத்து இது தொடர்பாக சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் செந்தில், காவலர் தர்மராஜனிடம் விசாரணை மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க...விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட நிபந்தனைகள்: தளர்வுக்கு வாய்ப்புள்ளதா?