நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டியைச் சேர்ந்த பூவரசன் அவரது நண்பர்கள் ஜெகன், தியாகு ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வந்துள்ளனர்.
இவர்கள் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, சேந்தமங்கலத்திலிருந்து நாமக்கல் நோக்கி கற்களை ஏற்றிச்சென்ற டிப்பர் லாரியும், இருச்சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த பச்சுடையாம்பட்டி புதூரைச் சேர்ந்த பூவரசன் (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில், படுகாயமடைந்த சேந்தமங்கலம் மேட்டுத்தெரு ஜெகன் (24), தியாகு ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஜெகன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தியாகுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேந்தமங்கலம் காவல்துறையினர், டிப்பர் லாரி ஓட்டுநர் அரவிந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை உடற்கூறாய்வுக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.