நாமக்கல்: ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர், பெரியசாமி(63). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (டிசம்பர் 25) தனது வீட்டு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, அவ்வழியாக வந்த கார் இவரது வாகனத்தின் மீது மோதியது.
இதில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெரியசாமிக்கு, கால்களில் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் பெரியசாமியை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பெரியசாமிக்கு முதலுதவி சிகிச்சை என்ற பெயரில், அவரது காலில் உள்ள கண்ணாடி துகள்களை அகற்றாமல் அப்படியே வைத்து கட்டு கட்டியுள்ளனர்.
தொடர்ந்து வலி தாங்க முடியாமல் பெரியசாமி கதறியதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், தொடர்ந்து கால்களை நகற்றக்கூட முடியாமல் பெரியசாமி தவித்து வந்ததால், அவரது உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
அங்கு பெரியசாமியின் காலில் கட்டப்பட்ட கட்டுகளை அகற்றிய போது, காயப்பட்ட இடத்தில் கண்ணாடி துண்டுகள் இருந்ததைக் கண்டு பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் பெரியசாமியின் காயம் பட்ட இடத்தில் இருந்து கண்ணாடி துகள்களை அகற்றம் செய்தனர்.
கண்ணாடி துண்டுகளை அகற்றாமல் காயத்தின் மீது கட்டுக்கட்டி அலட்சியமாக செயல்பட்ட ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது அதிரடி ஆக்ஷன் - மிரட்டும் சென்னை போலீசார்