நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம், ஜேடர்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை உற்பத்தி ஆலைகளில் வெள்ளை சர்க்கரை, ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படுவதாக நாமக்கல் எம்.பி சின்ராஜிற்கு புகார்கள் தொடர்ச்சியாக வந்தன.
இதையடுத்து, இன்று (அக்.,19) ஜேடர்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் 3 வெல்ல உற்பத்தி ஆலைகளில் எம்.பி., சின்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவை உற்பத்தி செய்யும்போது கரும்பு பாகுடன் வெள்ளை சர்க்கரை, மைதா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் சோடியம் ஹைப்போ குளோரைடு உள்ளிட்டவைகள் கலப்படம் செய்து வருவது கண்டறியப்பட்டது.
கலப்படம் செய்வதற்காக மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருந்த வெள்ளை சர்க்கரை (அஸ்கா), ரசாயன பொருட்களுடன் 50 மூட்டை ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததையும் எம்.பி., கண்டறிந்தார்.
இதையடுத்து, கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடமும் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததற்காக வட்ட வழங்கல் அலுவலரிடமும் தகவல் தெரிவித்து பிணையில் வெளிவராத அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்