நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் சாலையில் உள்ள நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் நியாய விலை கடை எண் 8, 15 ஆகிய இரு கடைகள் உள்ளன. அப்பகுதியில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த இரு நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டன.
இதனையடுத்து கரோனா பாதித்தப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண தொகை அந்தந்த பகுதிகளுக்கேச் சென்று விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. நியாயவிலை கடை விற்பனையாளர், எடையாளர் , காவலர் மற்றும் உதவியாளருடன் பொருள்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று அப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயுடன் ரேசன் பொருள்களையும் வழங்கினர்.
இது குறித்து விற்பனையாளர் கூறுகையில், ’’நியாயவிலை கடை அமைந்துள்ள பகுதி கரோனா தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு கடை மூடப்பட்டுள்ளதால் அப்பகுதியை தவிர்த்து மற்ற பகுதியில் உள்ளவர்களுக்கு அரசின் கரோனா உதவி தொகையோடு, ரேசன் பொருளும் வழங்குகிறோம். அதே போல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு வீடாக சென்று நிவாரண தொகையும், ரேசன் பொருட்களும் வழங்கி வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.